தமிழகத்தில் இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், 11-ம் தேதி கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் வரும் 12-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், 13-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.