அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திறனாய்வு தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வித்துறை, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவு 2-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (என்எஸ்பி) உதவித்தொகைக்காக ஆன்லைனில் பதிவு செய்யும் போது ஒடிஆர் எனப்படும் ஒருமுறை பதிவு அவசியம்.
இதற்கு மாணவர்களின் செல்போன் எண் தேவை. ஆதார் சார்ந்த இ-கேஒய்சி மேற்கொள்ளப்படும்போது ஓடிஆர் ஐடி வழங்கப்படும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு எளிதில் கல்வி உதவித்தொகை கிடைக்கும் வகையில், இது குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.