இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள், மேலும் முக்கிய அணுசக்தி மையமான நட்டன்ஸ், இஸ்பகான் உள்பட பல அணுசக்தி மையங்கள் தகர்க்கப்பட்டன. குறிப்பாக ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி உள்பட பல தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. ஈரானிய ஏவுகணைகளின் சரமாரியான தாக்குதலால் இஸ்ரேலில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஹைஃபா நகரில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை சரமாரியான தாக்குதலில் இஸ்ரேலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நிகராக ஈரானிலும் சேதங்கள் மதிப்பிடப்படுகின்றன.
வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது, 654 பேர் காயமடைந்துள்ளனர். அந்த 406 பேருக் 197 பேர் பொதுமக்கள். 90 பேர் ராணுவத்தினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 224 பேரே பலியானதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஈரானின் உச்சபட்ச தலைவரான காமெனியை கொல்ல இஸ்ரேல் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.