கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 23 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், 22-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!