ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாள் என அம்மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. அந்தவகையில் ஆடி மாதம் வரும் அமாவாசை திதி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதற்கும், கடலில் புனித நீராடி வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய தினமாகும்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, தங்கள் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செலுத்துவார்கள். உள்ளூர் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த நாளில் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 09.08.2025 இரண்டாவது சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.