திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போது வரை மாணவனின் இறப்பிற்கு காரணத்தைக் காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது வரை மாணவனின் இறப்புக்குப் பின்னுள்ள காரணத்தைக் காவல்துறை கண்டுபிடிக்காதிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு அதே பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்திற்குப் பின்னுள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்காததோடு, தற்போது நிகழ்ந்துள்ள மாணவனின் மரணத்திற்கான விசாரணையிலும் திமுக அரசு அலட்சியம் காட்டிவருவது மாணவர்களின் உயிரின் மீது அரசுக்கு துளியும் அக்கறை இல்லையோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.
மூன்றாவதாக மீண்டுமொரு அசம்பாவிதம் அந்தப் பள்ளியில் நிகழாமல் இருப்பதைத் தடுக்க, இவ்விரண்டு மாணவர்களின் மரணத்திற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, பள்ளியைத் திறந்து வைத்தவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும், பள்ளி அமைந்திருக்கும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.