பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்..! விசாரணையில் அதிர்ச்சி

poison 2025

கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை 14 ஆம் தேதி அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களில் 12 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிநீர் தொட்டியின் அருகே ஒரு பாட்டில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அதை ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த பாட்டிலில் 3 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு மாணவன் ஜூஸ் பாட்டிலை குடிநீர் தொட்டியில் போட்டதாக ஒப்புக்கொண்டார். அந்த ஜூஸ் பாட்டிலை அவனிடம் கொடுத்தது யார் என்று விசாரித்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மதரா என்ற ஓட்டுநர் தான் தன்னிடம் கொடுத்ததாக சிறுவன் கூறியுள்ளான். இதனையடுத்து கிருஷ்ணா மதராவை பிடித்து விசாரித்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சேனா தலைவர் சாகர் பாட்டீல் மற்றும் நாகனகவுடா பாட்டீல் ஆகிய இருவரும் தன்னை மிரட்டி இவ்வாறு செய்ய வைத்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் தான் சிறுவனுக்கு சாக்லெட்டுகள் மற்றும் 500 ரூபாய் பணம் கொடுத்து பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை குடிநீர் தொட்டியில் போடச் சொன்னதையும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து சாகர் பாட்டீல் மற்றும் நாகனகவுடா பாட்டீல் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த சுலைமான் கோரி நாயக் அங்குள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிவது தங்களுக்கு பிடிக்காததால், நீரில் விஷத்தை கலக்கி, அதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்ற கணக்கில் இவ்வாறு திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Vignesh

Next Post

Alert: இன்று அதிகனமழைக்கான எச்சரிக்கை... 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று...!

Tue Aug 5 , 2025
தமிழகத்தில் தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 6, 7 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான […]
cyclone rain 2025

You May Like