திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் உள்ள மடத்துக்குளம் அருகே அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் நடந்த சம்பவம் ஒரே கிராமத்தை கலக்கம் அடைய செய்திருக்கிறது. இந்த தோட்டத்தில், மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் வேலை செய்து வந்தனர். நேற்று இரவு, இருவரும் மதுபோதையில் சண்டையில் ஈடுபட்டனர்.
இதில் தங்கபாண்டியன், தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள், காவல் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து தகவல் அளித்தனர். அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
சண்டையை நிறுத்திய அவர், மூர்த்திக்கு தற்காலிக சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் அனுப்ப ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, சண்முகவேலை வெட்டிக் கொலை செய்தான். அதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளருடன் வந்த ஓட்டுநரையும் துரத்தி சென்றுள்ளார். அவர் தப்பித்து ஓடிவிட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை சரக டிஐஜி, திருப்பூர் எஸ்பி, மற்றும் பல மேலதிக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது, 100க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பி ஓடிய தங்கபாண்டியை பிடிக்க போலீஸார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட சிறபு காவல் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ரூ.30 லட்சம் நிதியுதவியும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read more: நீரிழிவு நோய் வராம தடுக்க இந்த 5 விஷயங்களில் கவனமா இருங்க..!!