2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நாங்கள் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பிரேமலதா அறிவித்தார்.
தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே கடந்த வாரம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர். இதையடுத்து அவர்களும் திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணி தலைவர்களுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை, கூட்டணியில் இணையப்போகும் புதிய கட்சிகள் குறித்து ஆலோசிக்கும் ஸ்டாலின், தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக கருத்துக் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. 9+1 (ராஜ்யசபா) சீட் வரை தேமுதிகவுக்கு கொடுக்க திமுக உறுதியளித்ததாக தகவல் வெளியான நிலையில், இன்று ஸ்டாலின் முக்கிய முடிவை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Read more: அதிமுக முன்னாள் MLA துரை அன்பரசன் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்..!!