2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வலுவான கூட்டணி உருவாகும் என்றும், மக்கள் ஆட்சி மாற்றம் விரும்பி உள்ளனர் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார். ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டேன். ‘காலத்தே பயிர் செய்’ என்று சொல்வார்கள். நான் விவசாயி என்பதால், 8 மாதத்துக்கு முன்பே சரியான நேரத்தில் பிரசாரத்தைத் தொடங்கினேன். தாமதித்திருந்தால் 234 தொகுதிகளுக்கும் செல்வது சாத்தியமில்லை. அதனால்தான் இப்போதே மக்களை நேரில் சந்தித்து வருகிறேன்.
கடந்த தேர்தலில் தி.மு.க. சில திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது. ஆனால், நாங்கள் நிறைவேற்ற முடியாததை பொய்யான வாக்குறுதிகளாகச் சொல்ல மாட்டோம். இருக்கிற நிதியை வைத்து மக்களுக்கு தேவையானதைச் செய்து கொடுப்போம். கடந்த 50 மாதங்களில் தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
போதைப்பழக்கம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பரவி விட்டது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து ரவுடிகள் தமிழகத்துக்குள் வந்து குற்றங்களை செய்கின்றனர். போலீசுக்கு அவர்கள் பயப்படுவதில்லை. போலீஸ்காரர்களே ரவுடிகளை கண்டு பயப்படும் நிலை உள்ளது. இந்த நிலைமைக்கு முடிவு கட்டுவது எங்களது கடமை. சட்டசபை ஒவ்வொரு தடவையும் கூடும் போது, போதைப்பொருள் பிரச்சனையை நான் சுட்டிக்காட்டி வந்தேன். ஆனால் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியது.”என்றார்.
அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு தி.மு.க. பயம்:
அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி அமைந்ததால் தி.மு.க. மிகவும் பயந்து விட்டது. அதனால் பா.ஜ.க. ஆட்சியில் பங்குக்கேட்கும் என்கிற வதந்திகளை திட்டமிட்டு பரப்பினர். எனினும், அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். நாங்கள் சொல்வது மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில் தான். தி.மு.க. 10 சதவீத வாக்குறுதிகள்கூட நிறைவேற்றவில்லை. சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாக பயன்படுத்துகிறது. ஆனால் அ.தி.மு.க. எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்; அது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.
வலுவான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள்: என் நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க விரும்பும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். பல கட்சிகள் என் கருத்தை ஏற்றுக்கொண்டு, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனவே வலுவான கூட்டணி உருவாகும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
அ.தி.மு.க. பலமுறை தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால் தி.மு.க. பணத்தை வீசி சில கட்சிகளை அடிமைப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது. தி.மு.க. தனியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேளுங்கள். அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read more: ரூ.4600 கோடி சொத்து! புதிய படங்கள் இல்லை, ஆனால் இந்தியாவின் பணக்கார நடிகை! யார் தெரியுமா?