சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி தலைவராக பரத் தேர்வாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வந்தனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்ட நிலையில், சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் ஆர்த்தி கணேஷ்கர். சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தலைவர் பதவிக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதில் நடிகர் பரத் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் 222 வாக்குகளும் தினேஷ் 175 வாக்குகளும் ஆர்த்தி 33 வாக்குகளும் பெற்றனர்.
தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு செயலாளர் பதவிக்கான வாக்குகல் எண்ணப்பட்டன. இதில் நடிகர் நவீந்தர் 471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நிரோஷா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். பொம்மலாட்டம், யாரடி நீ மோகினி முதலான பல சீரியல்களில் நடித்திருக்கும் பரத் கடந்த நிர்வாகத்தில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். இதுவரையில் சங்க நிர்வாகத்தில் இளம் வயதில் தலைவர் ஆனது இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரவீனாவுக்க் வாக்களிக்க மறுப்பு
வாக்களிக்க வந்த சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா, தனக்கு வாக்குரிமை இருந்தும் தன்னை வாக்களிக்க விடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், தனக்கு தொழில் ரீதியாக மட்டுமே ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்குரிமை மறுக்கப்பட்டதில் நியாயம் இல்லை எனவும் அவர் கூறினார்.
Read more: பெங்களூருவின் பழைய பெயர் என்ன?. இப்படியொரு வரலாறு இருக்கா?. தெரிஞ்சுக்கோங்க!