தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. மேலும், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் ஜேசு, அண்ணாமலை, கல்யாண ராமன், செய்யது இப்ராஹிம், முனிஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் ஜூன் 29-ம் தேதி சிறைப்பிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா இலங்கை மதிப்பின்படி தலா ரூ.5 லட்சம் என ரூ.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்திய மதிப்பின்படி ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டிய பின் 8 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.