சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்கள் திருத்தம் ஆகியவை குறித்து வெளியாகும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில அங்கீகாரம் இல்லாத நபர்கள் மற்றும் அமைப்புகள், சிபிஎஸ்இ குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் விரைவாக திருத்தமோ, மாற்றமோ செய்ய முடியும் என்று போலியாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் அத்தகைய வாக்குறுதிகளில் உண்மை எதுவுமில்லை. இந்த அமைப்புகள் அல்லது தனி நபர்களுடன் சிபிஎஸ்இ-க்கு எந்தத் தொடர்பும் இல்லை. பெற்றோர் நம்புவது தவறான தகவல்களுக்கோ, நிதி இழப்புக்கோ அல்லது பிற தீவிரமாக பிரச்சினைகளுக்கோ வழிவகுக்கும்.
சான்றிதழ்களில் திருத்தம் அல்லது தேர்வு தொடர்பான சேவைகள் அனைத்தும் சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்ற முகவரியில் மட்டுமே இருக்கும். இதை மட்டுமே மாணவர்களும் பெற்றோர்களும் நம்ப வேண்டும்.இதுதொடர்பான வருங்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கு சிபிஎஸ்இ வாரியம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.