ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின்; எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்ட்கள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்த உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும். 1950-ல் சேலம் சிறையில் 22 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நாளை கண்டன நாளாக அறிவித்த பெரியார், ஊர்வலங்களை நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று அங்கு மணி மண்டபம் அமைக்கப்படும்.திமுக தோழமைக் கட்சிகளின் ஒற்றுமை பலரின் கண்களை உறுத்துகிறது.
கூட்டணியை உடைக்க எத்தனையோ சதி செய்து, பொய் தகவல்களை பரப்புகின்றனர். அதில் முக்கியமானவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல் திடீர் பாசம் பொங்குகிறது. அடிமைத்தனம் பற்றி பழனிசாமி பேசலாமா…? எங்களைப் பொறுத்தவரை யாரும், யாருக்கும் அடிமை இல்லை. எங்களது இயக்கம் அடிமைத் தனத்துக்கு எதிரானது. அந்தக் கொள்கை தெரியாமல் பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசுகிறார். கூட்டணியில் இருந்தாலும்நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க கம்யூனிஸ்ட்கள் தவறுவதில்லை. நாங்களும் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம்.
ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில்தான் சதி செய்கிறார்கள் என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்துள்ளனர். மக்களாட்சியைப் பாதுகாக்க, இந்த சதித் திட்டத்தை அம்பலப்படுத்திய ராகுல் காந்திக்கு எனது பாராட்டுகள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பாக, சுதந்திரமான, நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.