சென்னை நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் ரூட்டில் உள்ள மிக முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்று பரங்கிமலை ரயில் நிலையம். செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று அழைக்கப்படும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால், இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும்.
பரங்கிமலை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 3 வயது ஆண் குழந்தையை சானடோரியம் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து கீழே இறக்கி விட்டு ஓடி விட்டார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு போலீசார் குழந்தையை கண்டு மீட்டு பரங்கிமலைக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, ரயில் நிலையத்தில் உள்ள ‘சிசிடிவி‘ கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலில் இருந்து ஒருவர், குழந்தையை இறக்கி விடுவது பதிவாகி இருந்தது. சானடோரியம் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன், ரயில் பெட்டியில் இருந்த நபர் குழந்தையை நடைமேடையில் இறக்கிவிட்டு செல்லும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையின் விவரம் எதுவும் தெரியாததால், சிறுவன் ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குழந்தையை ஏன் ரயிலில் கொண்டு வந்தார்கள்? எதற்காக இறக்கி விட்டார்கள்? அந்த நபர் குழந்தையை கடத்தியவரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், குழந்தையை ரயிலிலிருந்து இறக்கி விட்டு சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.