சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 45), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம், ரஞ்சித் குமார் தனது வீட்டிற்கு அருகிலுள்ள மைதானத்தில், கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜித் (வயது 28) திடீரென கத்தியை எடுத்து, ரஞ்சித்தின் கழுத்தில் குத்தினார்.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அஜித்தை மடக்கிப் பிடித்து, சரமாரியாக அடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடுமையாக காயமடைந்த ரஞ்சித்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த அஜித், தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பல ஆண்டுகளாக பழிவாங்கும் எண்ணமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, அஜித் சிறுவனாக இருந்தபோது, அவரது உறவுக்கார பெண்ணுக்கும் ரஞ்சித் குமாருக்கும் இடையே தொடர்பு இருந்து, அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
ஒருநாள் இருவரும் உல்லாசமாக இருப்பதை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அஜித் பார்த்துவிட்டார். இதனால் கோபமடைந்த ரஞ்சித் குமார், அஜித்தை அடித்து வீட்டிலிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனத்தில் பகையை வளர்த்துக் கொண்ட அஜித், ரஞ்சித் மீது பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்துள்ளார். சம்பவ நாளில் ரஞ்சித் தனியாக இருந்ததை பயன்படுத்தி, அவர் மீது கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும், அஜித்தின் மீது ஏற்கனவே திருட்டு, அடிதடி உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.