விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி ஏரிக்கரையில், 2024 மார்ச் 1-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. கழுத்தில் கயிறு பிணைக்கப்பட்டிருந்ததால், இது கொலைவழக்கு என ஒலக்கூர் போலீசார் உறுதி செய்தனர். சடலத்தை பறிமுதல் செய்து, விசாரணை துவங்கினாலும், நீண்ட நாட்களாக இறந்தவரின் அடையாளமே தெரியவில்லை.
இறந்தவரின் புகைப்படம் மற்றும் அடையாள விவரங்கள் சமூக வலைதளங்களிலும் நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டன. அதுவும் பலன் அளிக்காத நிலையில், மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டது.
சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, ஏரிக்கரையில் கொல்லப்பட்டவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர் ஆண்டிப்பட்டி அருகே எரதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி (30) என உறுதி செய்யப்பட்டது. ஜோதிமணி, அதே பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் காதலித்து வந்துள்ளார். ஆனால், குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்ததால், உமாவுக்கு வேறு ஒருவருடன் அவசர திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பிறகும், உமாவை மறக்க முடியாத ஜோதிமணி அடிக்கடி தொந்தரவு செய்தார். “லவ் டார்ச்சர்” அதிகரித்ததால், உமா பெற்றோரிடம் புகார் செய்ததாக தெரியவந்தது. இதனால், “ஜோதிமணி உயிருடன் இருந்தால், மகள் நிம்மதியாக வாழ முடியாது” என்று எண்ணிய பெற்றோர், அவரை கொலை செய்யத் திட்டமிட்டனர்.
2024 மார்ச் 1-ம் தேதி, உமா, அவரது தந்தை மாரியப்பன், தாய் பஞ்சவர்ணம் ஆகியோர், ஜோதிமணியை டாட்டா ஏசி வாகனத்தில் பாதிரி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மூவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை அங்கேயே வீசி விட்டுச் சென்றனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு, போலீசார் இந்த கொலை மர்மத்தை தீர்த்தனர். இதில் தொடர்புடைய உமா மற்றும் அவரது பெற்றோர் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Read more: தினமும் வெந்நீரில் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? ஆனா இந்த பிரச்சனைக்கும் தயாரா இருங்க..!!