புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சையும் அவருக்கு அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த சூழலில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆனால் சமீபத்தில் அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.