தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது..
இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.. முதலில் தேசிய கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் பின்னர் டிடிவி தினகரனும் வெளியேறினார். தனது முடிவை மறு பரிசீலனை செய்ய தினகரனிடம் வலுயுறுத்துவேன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்..
சென்னையில் டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்ததாக கூறப்படுகிறது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மீண்டும் இணைய வேண்டும் என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்த நிலையில், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று டிடிவி இன்று அறிவித்தார்..
இந்த சூழலில் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. சென்னையில் இந்த ரகசிய சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.. தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மூவரும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மூவரும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.. ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவருமே இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், இந்த ரகசிய சந்திப்பு தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.
ஆனால் மறுபுறம் இபிஎஸ் எந்த காரணத்தை கொண்டும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி வருகிறார்.. எனினும் எந்த நிபந்தனையும் கட்சியில் இணைய தயார் என்று ஓபிஎஸ் தரப்பு கூறினார்.. அதையும் இபிஎஸ் பொருட்படுத்தவேவில்லை.. சசிகலாவும் ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றி பெற முடியும் என்று கூறி வருகிறார்.. சசிகலாவின் ஆலோசனைப்படியே செங்கோட்டையன் கட்சியில் போர்க்கொடி தூக்கியதாக கூறப்படுகிறது..
ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக மீண்டும் ஒருங்கிணைக்கப்படும் என்றும், அதற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் நீக்கப்படுவார் என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர்.. பாஜகவும் அதற்கு ஓ.கே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. எனவே இபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த கேள்விக்கான பதில் தெரிந்துவிடும்..
Read More : தவெக தொடர்ந்த வழக்கு.. விதிகள் வகுக்க அக்.16 வரை அரசுக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்..!



