கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதி. விவசாயிகளான இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் இழப்பீடு தொகை கிடைத்துள்ளது.
இதை தெரிந்து கொண்ட பாஜகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் சாமிநாதன் என்கிற ராஜராஜசாமி, கோகுல கண்ணன், ராசுகுட்டி ஆகியோர் இழப்பீடு தொகை கிடைக்க நாங்கள் தான் காரணம் என்றும், எங்கள் குழுவினர் தான் அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்தோம். 10 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை எனில் குடும்பத்தில் அனைவரையும் இரவோடு இரவாக தூக்கி விடுவோம், கோவையில் அண்ணாமலைக்கு பவர் உள்ளது என்று மிரட்டல் விடுத்துள்ளனர். வேறுவழியின்றி ரூ.10 லட்சத்தை நாகராஜ்- நாகமணி தம்பதியினர் கடந்த ஜூன் மாதம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் பணம் கேட்டு பாஜ நிர்வாகிகள் மிரட்டல் விடுத்து வருவதாக நாகராஜ், நாகமணி தம்பதியின் இளைய மகனான ஐடி ஊழியர் அருணாச்சலம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக அண்ணாமலையும் கூறிவிட்டார். இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் நடந்து கொண்டதாக கூறி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் சாமிநாதனை நீக்கி, பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
Read more: படப்பிடிப்பில் பாலியல் துன்புறுத்தல்.. நடிகை பரபரப்பு புகார்.. பிரபல கன்னட நடிகர் கைது!



