தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மொய்னாபாத் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்குள்ள காட்சி கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு மொத்தம் 65 பேர் போதைப்பொருளின் தாக்கத்தில் நடனமாடி கொண்டிருந்தனர். அதில் 22 சிறுமிகள் இருப்பது போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், இருவர் கஞ்சா புகைத்திருந்ததும், மற்றவர்கள் மது அருந்தியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், சோஷியல் மீடியா செயலிகள் மூலம் ஆட்களை அழைத்து, போதை விருந்தை ஏற்பாடு செய்ததாக கனடாவை சேர்ந்த இஷான் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் கர்நாடகாவின் ஆனெக்கல் பகுதியில், பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற ரேவ் பார்ட்டி கைது வழக்காகி இருந்தது. அதேபோல் சத்தீஸ்கரில் நிர்வாண விருந்து நடத்த முயன்றவர்களும் போலீசாரால் தடுக்கப்பட்டிருந்தனர்.
மேல்நாடுகளில் பிரபலமான நிர்வாண விருந்துகள், தற்போது இந்தியாவிலும் ரிசார்ட்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்து வருவது சமூக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிகழ்ச்சிகளில் சிறுமிகளும் சிக்கிக்கொள்வது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் போலீசார், “போதை விருந்துகளில் பங்கேற்கும் இளம் வயதினர், மாணவர்கள் மீது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சட்டவிரோத நிகழ்ச்சிகளுக்கு எவரும் ஆதரவு அளிக்கக் கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.