தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கூட்டம், முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியோடுதான் காங்கிரஸ் கட்சி தொடரும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும், கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடாங்கர், “தமிழகத்தில் 22 ஆயிரம் கிராமங்களில் கிராமக் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி வருகிறோம்,” என்றார்.
மேலும் கூறியதாவது: “தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளோம். இதுவரை 76 லட்சம் 6 ஆயிரத்து 681 கையெழுத்துகள் பெற்றுள்ளோம். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 125 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். கூட்டணி, தொகுதி பகிர்வு, ஆட்சிப் பங்கு இவை அனைத்தும் கட்சி மேலிடம் தீர்மானிக்கும் விஷயங்கள்.” என்றார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜயுடன் ராகுல் காந்தி பேசி ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து, தவெக–காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற பேச்சும் எழுந்தது. விஜய் இதுவரை தனது பேச்சுகளில் காங்கிரஸை விமர்சித்ததில்லை என்பதும், ராகுல் காந்தியுடன் நல்ல உறவு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், காங்கிரஸ் தலைவர்களும் தவெகவை நேரடியாக விமர்சிக்காமல் இருந்து வருகிறார்கள்.
Read more: மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல்… அடுத்த 12 மணி நேரத்தில் சம்பவம்…!



