ரஷ்யாவில் 14 வயது பள்ளி மாணவி துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அவருடன் படிக்கும் மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய மாணவியும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் ரஷ்யாவில் ஒரு விகிதாச்சமான மனநிலை நிலவி வருகிறது.
ரஷ்யாவின் தெற்கு எல்லை புறப்பகுதியான பிரயான்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் பயிலும் 14 வயது மாணவி தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகை புரிந்த இந்த மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் வகுப்பில் இருந்த மற்ற மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் கொடூர சம்பவத்தில் காயமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவிலேயே குணமடைந்து வீடு திரும்புவார்கள் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த மாணவி எதற்காக பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து வந்து தாக்குதல் நடத்தினார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
25 மாணவிகள் இருந்த வகுப்பறையில் ஒரு மாணவியை தவிர மற்றவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ரஷ்யாவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. எனினும் ரஷ்ய பள்ளிகளில் துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக தலைதூக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்ய பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 15 மாணவர்கள் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.