சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசும் தனியாக நிவாரணம் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துவிட்டு டெல்லி திரும்பிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரதமர் மோடியை சந்தித்து விரிவான ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். ராஜ்நாத்சிங் கொடுத்த அறிக்கையில் பாதிப்புகளின் விவரங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், அதைத்தாண்டி, பிரதமரிடம் சில விஷயங்களை ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார்.
அதாவது, ஜீரணிக்கமுடியாத பாதிப்புகளில் சென்னை இருக்கிறது. இப்போதைக்கு மத்திய அரசின் நிதியுதவி அவசியம். தமிழக அரசு அதிகாரிகளிடம் விவாதித்த வகையில், நிதி நெருக்கடி கடுமையாக இருக்கிறது. நிவாரண நிதி உதவி செய்வதுடன், தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து கொடுத்து உதவ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழக அரசு இருப்பதையும் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், திமுக அரசின் மீது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோபமாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அந்தக் கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மத்திய பாஜக அரசு முயல்கிறது. அதற்காக அனைவரின் வங்கிக் கணக்கிலும் மாநில அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகைக்கு இணையான தொகையை வரவு வைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.