பெண் அரசு ஊழியரை நிர்வாணப் படங்களை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பெண் ஒருவர், தன் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக குற்றம்சாட்டி, தற்போது தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்க முயன்ற வழக்கில், அவரது ஆண் நண்பருடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் கடம்பத்தூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்த ஹேமலதா என்பவர், தனது ஆண் நண்பர் ஜெயந்த் மூலம் பெண் அரசு ஊழியரை காதல் வலையில் சிக்க வைத்து, தனிமையில் எடுத்த புகைப்படங்களைப் பயன்படுத்திப் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். 3 மாத சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வெளியே வந்த ஹேமலதா, தன் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது புகார் அளித்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்காக எஸ்பி அலுவலகத்தில் ஹேமலதா மற்றும் ஜெயந்த் ஆஜரானபோது, அங்கு வேறு ஒரு விஷயத்திற்காக வந்திருந்த அந்த செய்தியாளரைப் பார்த்ததும் ஹேமலதா கோபமடைந்தார். பின்னர், போலீஸார் முன்னிலையிலேயே ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திச் செய்தியாளரை மிரட்டியதுடன், கீழே தள்ளித் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
போலீஸார் தடுத்தும் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்ட ஹேமலதாவும், ஜெயந்தும் அங்கிருந்து தப்ப முயன்றனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹேமலதா மற்றும் ஜெயந்த் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து மீண்டும் கைது செய்தனர். கைதுக்குப் பிறகு மனநலப் பாதிப்பு ஏற்பட்டதாக ஹேமலதா நாடகமாடியபோதும், மருத்துவரின் பரிசோதனையில் அவர் மனத் தெளிவுடன் இருப்பது உறுதியானது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டனர்.



