தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வானிலை நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.மேலும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெற்றது. இதில், நிகழ்நேர பேரிடர் கண்காணிப்பு கருவிகள், புயல் சீற்ற மாதிரி, மாநகராட்சிகளுக்கான வெப்ப அலை செயல்பாட்டு திட்டம், சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் ஒருங்கிணைந்த வெள்ள கண்காணிப்பு மையம், அவசரகால செயல்பாட்டு மையம், மக்களுக்கான டி.என்.அலர்ட் (TN Alert) செயலி, அதிகாரிகளுக் கான டி.என்.ஸ்மார்ட் 2.0 (TN Smart 2.0) இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் 2025-க்கு மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதலும் வழங்கப்பட்டது.
கடந்த 2021-25-ம் ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) மத்திய அரசு ஒதுக்கிய ரூ.5,352 கோடியைவிட தமிழக அரசு கூடுதலாக ரூ.9,170 கோடி செலவு செய்துள்ளது. இந்த நிதி ஆண்டுக்கு மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதி ரூ.826.50 கோடி வர வேண்டி உள்ளது என்று முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்: மழைக்காலங்களில் ஏழை, எளிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால், பேரிடர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் முதல்முறையாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பேரிடர் மேலாண்மை சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,740 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசைவிட அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளோம். மக்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, தொய்வின்றி இப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பேரிடர் மேலாண்மைக்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்கி, முறையாக பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி அமைய வேண்டும்.
சில மாவட்டங்களில் நவ.29, 30-ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வருவாய், உள்ளாட்சி, காவல், தீயணைப்பு, மீன்வளம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும். தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனே அனுப்ப வேண்டும். மீட்பு, நிவாரண மையங்களை தயாராக வைத்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



