விவசாயிகள் கௌரவிப்பு நிதியின் கீழ் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 21 தவணைகளில் மொத்தம் ரூ.12,764.08 கோடி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு தவணையிலும் வழங்கப்பட்ட தொகையின் விரிவான விவரங்களைப் பட்டியலிட்டார்.விவசாயிகள் கௌரவிப்பு நிதி – பிஎம் கிசான் திட்டம் 2019 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் நிதி தேவைக்காக ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6,000 வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான நான்கு மாத காலத்திற்கு 2025 நவம்பர் 19 அன்று 21-வது தவணைத்தொகை வழங்கப்பட்டதாகவும், இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேரந்த 1,38,955 விவசாயிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21,321 விவசாயிகளும் பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தில் பிஎம் கிசான் போர்ட்டல், பிஎம் கிசான் செயலி, பொதுச்சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம் என்றும், உரிய சரிபார்ப்புக்குப்பின் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிதி பெற அனுமதி அளிப்பதாகவும் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ், 21 தவணைகளில் ரூ. 4.09 லட்சம் கோடி விவசாயிகளுக்கு நேரடி பயன் பரிமாற்ற முறையில் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



