வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. அதன்பின்னர் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியில் இணைந்த கையோடு தற்போது முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் வேகத்துடன் செங்கோட்டையன் செயல்பட்டு வருகின்றார்.
இதன் தொடர்ச்சியாக, அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து பல ‘பெரிய தலைகள்’ வெளியேற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்த பட்டியலில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகம் ஆகியோரின் பெயர்கள் முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நாமக்கலைச் சேர்ந்த தங்கமணி, அதிமுக தீர்மானக் குழுவில் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்திய அஞ்சலி கூட்டத்தில் அவர் பங்கேற்காமல் தவிர்த்தார். இது அவரது அதிருப்தியின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. மேலும், இந்த அதிருப்தி பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாக வெடிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், வட தமிழகத்தில் வன்னியர் வாக்கு வங்கியின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படும் சி.வி. சண்முகம், தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் தனியாக அஞ்சலி செலுத்தியது பல அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் ஆட்சியை தக்க வைப்பதில், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள கொங்கு வெள்ளாளர் வாக்குகள் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் தற்போது, இந்த இரண்டு ஆதார வாக்கு வங்கிகளும் சிதறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த விவகாரம் அன்றைய கூட்டத்தில் ‘பெரிய பூதகரமாக’ வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இது இபிஎஸ் தலைமையிலான அணிக்கு பெரும் அரசியல் பின்னடைவாக அமையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
Read more: காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா..?



