இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் ஏற்படும் பழக்கம் காதலாக மாறுகிறது. பள்ளிக்கு போகும் வயதிலேயே காதலில் விழும் சிறுமிகள் காதலுக்காக பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் தொலைப்பது அதிகமாக உள்ளது. சரியான வாழ்க்கை துணை அமைந்தால் சிக்கல் இருக்காது. மாறாக எதிர்பாராத விதமாக வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் வாழ்க்கை துயரமாகிவிடுகிறது. விருதுநகரில் பள்ளி மாணவிக்கு நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள களத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (24). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனிடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முனியாண்டி திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளார். சிறுமியும் அங்கு சென்ற நிலையில் சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டுனர். தொடர்ந்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கூறப்படும் முனியாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



