ஆந்திராவை சேர்ந்த வாணி (19) என்பவர், தனது தாய் வழி அத்தை சந்தியா உடன் சேர்ந்து இளைஞர்களை குறிவைத்து தொடர் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இச்சாபுரம் பகுதியை சேர்ந்த இவர்களின் மோசடி வலை, கர்நாடகா, ஒடிசா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில், கர்நாடகாவில் உள்ள துர்கா தேவி கோவிலில் ஒரு இளைஞரை திருமணம் செய்த வாணி, திருமணம் முடிந்ததும் புதுமாப்பிள்ளையுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். ஆனால், விஜயவாடா விசனிங்கபுரம் ரயில்வே நிலையத்தில் ‘பாத்ரூம் செல்கிறேன்’ என கூறி திடீரென அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் வாணி கிடைக்காத நிலையில், நேரடியாக இச்சாபுரம் சென்று வாணியின் அத்தையான சந்தியாவிடம் தகவல் சொல்ல முடிவு செய்துள்ளனர். அங்கு சென்றபோது, வாணி அங்கேயே இருப்பதை கண்டு அவர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விசாரித்தபோதுதான், பணத்திற்காகவே இந்த திருமணம் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருமணத்திற்கு வழங்கிய ரூ.1.5 லட்சம் பணத்தை திருப்பி தருமாறு மணமகன் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு, “பணத்தை திருப்பி தருகிறோம், இன்றிரவு இங்கேயே தங்கி செல்லுங்கள்” என வாணியும் சந்தியாவும் கூறியுள்ளனர்.
ஆனால் மறுநாள் காலை பார்த்தபோது, வாணியும் அவரது அத்தையும் வீட்டை பூட்டி எஸ்கேப் ஆகியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர், இச்சாபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது, வாணிக்கு இதற்கு முன் ஏற்கனவே 8 முறை திருமணம் நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது வந்துள்ள இந்த புகாருடன் சேர்த்து, இது 9-வது திருமண மோசடி புகார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாணியின் பின்னணி குறித்து விசாரித்ததில், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அவர், தாய் வழி அத்தை சந்தியாவின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார். சிறு வயதிலிருந்தே சந்தியா, வாணியை திருமண மோசடிகளுக்குப் பயன்படுத்தி வந்ததாக போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
திருமணம் செய்ய தயாராக இருக்கும் இளைஞர்களை குறிவைத்து, முன்கூட்டியே திருமண செலவுக்கான பணம் தருவோரையே வாணி டார்கெட் செய்துள்ளார். திருமணம் செய்து சில நாட்களிலேயே நகை, பணம், விலை உயர்ந்த பொருட்களுடன் தப்பிச் செல்வதே இவர்களின் முழுநேர வேலையாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதுவரை வாணியால் ஏமாற்றப்பட்டவர்களில் 2 கணவர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். காரணம், இதற்கு முன் நடைபெற்ற பல திருமணங்களின்போது வாணி மைனராக இருந்ததாகவும், 18 வயதுக்குக் கீழான பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்தால் சட்ட சிக்கலில் சிக்க நேரிடும் என்பதால், பலர் போலீசில் புகார் அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, வாணி மற்றும் அவரது அத்தை சந்தியாவை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம், இளைஞர்களை குறிவைக்கும் திருமண மோசடிகள் குறித்து மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை மணி அடித்துள்ளது.



