அமெரிக்கா வெனிசுலா மீது ஒரு விரிவான இராணுவத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாகவும், அதன் விளைவாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும், மதுரோவும் அவரது மனைவியும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் “ வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி,” என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில், தலைநகர் கராகஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுலா தலைநகர் கராகஸின் பல்வேறு பகுதிகளில் 7 குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தாழ்வாகப் பறந்த விமானங்களின் சத்தத்தையும் உள்ளூர்வாசிகள் கேட்டதாக கூறப்படுகிறது. கராகஸில் உள்ள ஒரு இராணுவ விமானக் கொட்டகையிலிருந்து புகை எழுந்தது, பல இராணுவத் தளங்களில் மின்சாரம் துண்டிக்கப்ட்டது..
அமெரிக்க ராணுவத் தாக்குதல்கள் தலைநகரை மட்டுமல்லாமல், மிராண்டா, அராகுவா மற்றும் லா குவைரா ஆகிய மாகாணங்களையும் குறிவைத்தன என்று வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது மேலும் வெனிசுலா அரசாங்கம் உடனடியாக அவசரநிலையை அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ இந்த வெளிநாட்டு இராணுவத் தலையீட்டைக் கண்டித்து, இது பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார். தனது வான்வெளியில் நுழையும் அமெரிக்க வர்த்தக விமானங்களுக்கு வெனிசுலா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
வெனிசுலா அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர். இது ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புச் செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் பட்ரினோ, உயிரிழப்புகள் குறித்த தகவல்களை நாடு திரட்டி வருவதாகவும், இருப்பினும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே வெனிசுலாவில் வசிக்கும் தென் கொரிய குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிபர் லீ ஜே-ம்யுங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிலைமை மோசமடைந்தால், எந்தவொரு குடிமக்களையும் வெளியேற்றுவதற்கு தென் கொரிய அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Read More : வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்.. போர் பதற்றம் அதிகரிப்பு… அவசரநிலை பிரகடனம்..!



