சீன சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள வீடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 10 மாதக் குழந்தை ஒன்றின் உடலில் கிட்டத்தட்ட 600 ஊசி குத்தப்பட்ட காயங்கள் இருப்பது காட்டப்படுகிறது..
“முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சூய் வென்யுவான்” என்ற பெயரில் இயங்கும் ஒரு சமூக ஊடகப் பயனர் இந்தக் காணொளியைப் பகிர்ந்ததாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்தக் காயங்கள் தாயால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நபர், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியுடன் இணைந்த சின்ஹுவா மருத்துவமனையின் முதுகெலும்பு மையத்தில் ஒரு மருத்துவராகப் பணிபுரிகிறார். கடந்த டிசம்பரில், 10 மாதக் குழந்தை ஒன்றுக்கு காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டதால், யுனான் மாகாணத்தின் பு’யர் நகரில் உள்ள மோஜியாங் கவுண்டி மக்கள் மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அந்த மருத்துவர் கூறியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்போதுதான் குழந்தையின் உடல் முழுவதும் ஊசி காயங்கள் இருப்பதைக் மருத்துவர்கள் கண்டறிந்தனர். குழந்தையின் கழுத்தில் உடைந்த ஊசியின் முனை ஒன்று பதிந்திருந்ததால், அதற்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த மருத்துவர், “ஊசியில் இருந்த துரு காரணமாக குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருந்திருக்கலாம். இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று முதல் நான்கு நாட்களில், அதன் காய்ச்சல் குறைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டது,” என்று கூறினார்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. வீடியோவை பார்த்த பலரும் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதள பயனர் ஒருவர் “அந்தக் குழந்தை மிகவும் பரிதாபமானது, தவறான குடும்பத்தில் பிறந்துவிட்டது. தயவுசெய்து அதன் உயிரியல் பெற்றோரை இனிமேல் அதை வளர்க்க அனுமதிக்காதீர்கள்,” என்று எழுதியுள்ளார்.
மற்றொருவர், “எவ்வளவு பயங்கரம். இந்த காலத்திலும் யாராவது இவ்வளவு கொடூரமாக இருக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை,” என்று பதிவிட்டுள்ளார். மூன்றாவது ஒருவர், “எவ்வளவு இரக்கமற்றவள். அதற்குப் பதிலாக அவள் தன்னைத்தானே குத்திக்கொண்டிருக்க வேண்டும். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை எவ்வளவு வலியை உணர்ந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்,” என்று கூறியுள்ளார்.
அதிகாரிகள் அறிக்கை வெளியீடு:
பொதுப் பாதுகாப்புப் பணியகம், சுகாதார ஆணையம், குடிமை விவகாரத் துறை மற்றும் ஒரு மகளிர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ஊசி காயங்கள் குழந்தையின் தாயால் ஏற்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
காய்ச்சல் அல்லது சளி ஏற்பட்டபோது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் தாய் பாரம்பரிய நாட்டுப்புற ‘ஊசி குத்தும்’ முறையைப் பயன்படுத்தியதாக விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. தாவோ என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்தத் தாய், குழந்தை தவறாக நடந்துகொள்ளும் போதெல்லாம் அதனை தண்டிக்கும் வகையில் இவ்வாறு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தாவோ ஏதேனும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.



