தற்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, முதலீட்டிற்கு மிகவும் உகந்த ஒரு உலோகமும் கூட. அனைத்து உலோகங்களிலும், வங்கிகளில் தங்கத்தின் மீது ஒரு தனி மோகம் உள்ளது.. ஆனால், தங்கத்திற்கான இத்தகைய அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்மையில் அதிக தங்கம் உள்ளது? என்று எப்போதாவது யோசித்தது உண்டா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் (GSI)படி, தங்கம் வெட்டியெடுப்பு மற்றும் உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ள மாநிலமாகும். அதுமட்டுமல்லாமல், நாட்டில் வெட்டியெடுக்கப்படும் மொத்த தங்கத்தில் 99 சதவீதம் கர்நாடக சுரங்கங்களில் இருந்துதான் வருகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்கச் சுரங்கங்கள் நாட்டின் பழமையான சுரங்கங்களாகும். அன்றிலிருந்து இங்கு தங்கம் வெட்டியெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தங்க உற்பத்தியில் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் மிகவும் பிரபலமான சுரங்கம் என்று கூறப்படுகிறது.
மேலும், அதிக தங்க இருப்பு உள்ள மாநிலம் கர்நாடகா அல்ல. அது பீகார். இங்குள்ள ஜமுய் மாவட்டத்தில் சுமார் 222.8 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது சிறிய நாடுகளின் தங்க இருப்பை விட மிக அதிகம்.
இருப்பினும், இங்கு பெரிய அளவில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. ஆய்வுப் பணிகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் தங்க இருப்பில் 44 சதவீதம் பீகாரில் உள்ளது. தங்கம் முக்கியமாக நிலத்தடி சுரங்கங்களில் இருந்து பெரிய அளவில் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகின் தங்க நுகர்வில் 26 சதவீதத்துடன், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாக உள்ளது.



