செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நடக்கும் திமுக வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் 5-ல் ஒரு பங்கு இருப்பவர்கள் திமுக வாக்குச்சாவடி முகவர்கள். சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்..
அதனால் இந்த கூட்டத்தை இந்த மண்டலத்தில் இருந்து தொடங்குகிறேன்.. தேர்தல் பணிகளில் திமுக உடன்பிறப்புகளை அடித்துக் கொள்ளவே முடியாது. தேர்தல் களத்தில் திமுக தான் ஹீரோ..
இந்த தேர்தலில் நாம் நாம் கட்டாயம் 2.50 கோடி வாக்குகளை பெற வேண்டும்.. வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.. இதனை வாக்குச்சாவடி முகவர்கள் உறுதி செய்ய வேண்டும். என்னதான் உத்திகளை வகுத்தாலும் வெற்றியை உறுதி செய்வது நீங்கள் தான்.. ஒவ்வொருவரும் தலா 100 வாக்காளர்களை 5 முறையாவது சந்திக்க வேண்டும்..
இன்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை எங்குமே இல்லை.. இதை நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றி வெற்றியை அறுவடை செய்ய வேண்டும்.. தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் அதிகரித்துள்ளது..
2026-ல் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும்.. அதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.. திமுகவின் சாதனைத் திட்டங்களை குடும்பம் தோறும் எடுத்துக்கூறி வாக்கு கேளுங்கள்.. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகளை சீல் வைத்து எடுத்து செல்லும் வரை கவனமாக இருக்க வேண்டும்.. உங்களை நம்பி தான் மொத்த கழகமும் இருக்கிறது.. என்னுடைய நம்பிக்கையே நீங்கள் தான்.. அறிவாலயத்தின் அஸ்திவாரம் வாக்குச்சாவடி முகவர்கள் தான்..
ஒவ்வொரு வீட்டிலும் சாதனைகளை எடுத்துச் சொன்னால் அவர்களை உங்களை வரவேற்பார்கள்.. திமுக ஆட்சி மீண்டும் வந்தால் தான் தமிழகம் மேலும் வளரும் என்று புரியவையுங்கள்.. வாக்காளர்களிடம் நட்பாகவும், கலகலப்பாகவும் உரையாட வேண்டும்.. திமுக 5 ஆண்டு சாதனைகள், எனது சட்டமன்ற உரைகள் அடங்கிய புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும்.. படியுங்கள்.. இது எனது அட்வைஸ் இல்லை.. கழக தலைவராக என் உத்தரவு.
காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், உங்களுடன் ஸ்டாலின், விடியல் பயணம், நலம் காக்கும் ஸ்டாலின் என திமுக அரசின் சாதனை திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.. சாதனை திட்டங்களை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருக்க வேண்டும்.. சொன்னதை மட்டுமே இல்லை, சொன்னாத திட்டங்களை செய்து காட்டிய அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது..
யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதையும் மக்களிடம் சொல்ல வேண்டும்.. தமிழகத்தில் தற்போதைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சர்வ நிச்சயமாக டெல்லி பாஜக ஆட்சியாக தான் இருக்கும்.. நமது கூட்டணியை தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் இதுவரை நாம் செய்த நலத்திடங்கள் நின்றுவிடும்.. தமிழ்நாட்டின் தொகுதி அளவை குறைத்துவிடுவார்கள்.. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு சென்றுவிடுவார்கள்..
வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல் தமிழ்நாட்டில் நடக்கும்.. இது நடக்க போகும் தேர்தல் தமிழ்நாடு Vs NDA. இன்னும் சொல்லப்போனால் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப் போவது தான் இந்த தேர்தல்.. நமது அரசியல் விருப்பு, வெறுப்பை தவிர்த்து, தமிழ்நாட்டை காக்க எல்லோரும் திமுகவை ஆதரிப்பதற்கான தேவையை விளக்க வேண்டும்.. பிளவுப்படுத்தி மதவாத அரசியலில் ஈடுபடும் விஷ விதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவே கூடாது..
நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக இல்லை.. தமிழ்நாட்டின் வெற்றிக்காக.. பாஜகவின் டப்பா என்ஜினுக்கு முன்னால் தமிழ்நாட்டின் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுனியாது.. இந்த உறுதியை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்ப்பது உங்கள் வேலை.. களப்பணி மட்டுமே இனி உங்கள் வேலை..” என்று தெரிவித்தார்..



