கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. அதே போல் திமுக அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் தோல்வி பயம் காரணமாகவே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன..
இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக “1000 ரூபாய்” கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து “கோடைக்கால சிறப்புத் தொகை” கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது “தேர்தல் நேரத்து பணம்” வரவு வைக்கும் இந்த “Patchwork” வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே “ரூ.3,50,000”!
இதை #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது “மாதம் 2000 ரூபாய்” என்று நான் அளித்த தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே..
யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து “ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்” என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. “அனைத்து குடும்ப அட்டைக்கும்” என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி , 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு “குல விளக்குத் திட்டம்” முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் “மாதம் ரூ.2000” என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்..” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ரூ.5,000 மகளிர் உரிமை தொகை.. தவெக மீதான அச்சம் தான் இதற்கு காரணம்.. விஜய் காட்டமான பதிவு..!



