23,000 இந்திய மாலுமிகள் மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்ததால் கடல் போக்குவரத்து பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வளைகுடாவில் சிக்கிய 36 இந்திய கப்பல்கள்
மார்ச் 5 நிலவரப்படி, இந்தியக் கொடியுடன் இயங்கும் 36 கப்பல்கள் Persian Gulf பகுதியில் சிக்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய ராணுவ தாக்குதல்களுக்கு பதிலாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது.. இந்த நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். உலகளவில் கடல் வழியாக செல்லும் கச்சா எண்ணெயில் சுமார் 20% இந்த வழியே கடந்து செல்கிறது.
கண்காணிப்பை அதிகரித்த இந்திய அரசு
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு அபாயம் அதிகமான கடல் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. முன்பு கப்பல்களின் நிலை 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணிக்கப்பட்டது. தற்போது அதை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிக்கியுள்ள கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுடன் அரசு அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
தற்போது 36 இந்தியக் கப்பல்களில் 1,074 இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் 7 கப்பல்கள் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமானவை. 12 கப்பல்கள் ஓமன் வளைகுடா பகுதியில், ஹார்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதியில் உள்ளன. 24 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையின் மேற்கு பகுதியில் சிக்கியுள்ளன. தற்போது 2 இந்தியக் கப்பல்கள், ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து வருகின்றன. ஆனால் மிகவும் பதற்றமானதாக இருக்கும் செங்கடல் பகுதியில் தற்போது எந்த இந்தியக் கப்பலும் செல்லவில்லை.
முக்கிய எரிசக்தி சரக்குகள்
இந்த கப்பல்களில் பெரும்பாலானவை முக்கியமான எரிசக்தி மற்றும் வணிக சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன. கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு, பிற வணிக சரக்குகள் (Commercial cargo) ஆகியவை அவற்றில் அடங்கும். இதனால் இந்த மோதல் நீடித்தால், உலகளாவிய எரிசக்தி மற்றும் வணிக விநியோகத்திலும் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Read More : பழிக்கு பழி வாங்கிய ஈரான்..! அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்..! நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்..!



