தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது..
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் கடந்த மாதம் இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினார்.. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார்..
இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடி நாளை திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.. அவர் டெல்லி திரும்பிய பின்னர் 5 மாநில தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
அதன்படி வரும் 15-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற அதிகம் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.



