டீசல் மற்றும் பெட்ரோல் மீதான ‘சிறப்பு கூடுதல் கலால் வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது.. தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா-ஈரான் போரினால் ஏற்பட்ட விநியோகத் தடைகளுக்கு மத்தியில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரின் காரணமாக மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு ரூ.10 குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி முன்பு லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்தது, தற்போது ரூ.3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் மீதான கலால் வரி முன்பு லிட்டருக்கு ரூ.10 ஆக இருந்தது, தற்போது 0 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விலை உயர்வு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 ஆகவும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கலால் விதிகள் மற்றும் வரி கட்டமைப்புகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. மத்திய அரசிதழ் அறிவிப்பின்படி, இந்த திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. எரிபொருள் விற்பனை நிலையங்களில் (பம்புகளில்) விற்கப்படும் விலைகளில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
எண்ணெய் வளம் மிக்க வளைகுடாப் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் இந்த கலால் வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது; அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களே இப்போர் மூளக் காரணமாக அமைந்தன. இப்போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் பேரலுக்கு 100 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது..
மேலும் ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய விநியோகப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளில் ஐந்தில் ஒரு பங்கு இப்பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது; தற்போது இப்பாதை போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும், இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியைச் சார்ந்திருப்பதால், இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்க அபாயங்களை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், SAED போன்ற கலால் வரிகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகளின் தாக்கத்தைச் சமன் செய்வதன் மூலமும், சில்லறை எரிபொருள் விலைகள் திடீரென அதிரடியாக உயர்வதைத் தடுப்பதன் மூலமும், நுகர்வோரையும் பரந்த பொருளாதாரத்தையும் இத்தீவிரமான தாக்கத்திலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



