தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அறிவித்து தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேர்பாளர்களையும் இன்று ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்தார். அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிருகிறார்.
புஸ்ஸி ஆனந்த் திநகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், சத்யபாமா திருப்பூர் வடக்கிலும் போட்டியிடுகின்றனர். இதேபோன்று எழும்பூரில் ராஜ்மோகன், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகர், திருப்பரங்குன்றத்தில் சி.டி.ஆர். நிர்மல்குமார், திருத்தனியில் சத்யகுமார் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே தனது நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு அளித்துள்ளார். ஸ்ரீநாத் விஜயின் கல்லூரி கால நண்பர். திரையுலகில் காமெடி நடிகராகவும், இயக்குனராக வலம் வருகிறார். விஜய் நாயகனாக அறிமுகம் ஆன நாளைய தீர்ப்பு திரைப்படத்திலும், வேட்டைக்காரன் திரைப்படத்திலும் விஜயின் நண்பராக நடித்துள்ளார். விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படாதது குறித்து விஜய் காரை வழிமறித்த அஜிதாவுக்கும் சீட் வழங்கவில்லை. இதனால் அஜிதா ஏமாற்றமடைந்துள்ளார். ஏற்கனவே புதிதாக வந்தவர்களுக்குதான் பதவி வழங்கப்படுகிறது. 3 வருடங்களாக கட்சியில் இருப்பவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என தவெகவினர் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில் மாற்று கட்சியில் இருந்து புதிதாக வந்தவர்களுக்கும், விஜயின் நண்பருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது தொண்டர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



