அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் ஈரான் இடையிலான மோதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் புதிய ஆட்சியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் அவர் முன்வைத்துள்ளார். அதன்படி, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக சர்வதேச போக்குவரத்திற்காகத் திறக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் விரைவில் சுமுகமான உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இதுவரை தாக்கப்படாத ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பகுதிகளை முழுமையாக அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலை “இறுதி நடவடிக்கை” என குறிப்பிடும் அவர், கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததற்கான பதிலடி இதுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஈரானியப் புரட்சிக்கு பிறகு நிலவி வரும் அமெரிக்கா–ஈரான் பகைமைக்கு இது முடிவுக் கட்டையாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில், ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த புதிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து, போர் சூழ்நிலை தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
Read more: IPL 2026| முதல் ஆட்டத்திலேயே சொதப்பிய CSK.. பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல்..!



