நடிகர் சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜக உடன் தனது கட்சியை இணைத்தார்.. தொடர்ந்து அவர் பாஜகவில் செயல்பட்டு வருகிறது.. பாஜக மேலிடம் அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது. இதனிடையே ஏப்ரல் 23 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் போட்டியிடவில்லை என அறிவித்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் நேற்று பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் பேசுகையில், “விஜய்யை நான் தவிர்த்தது இல்லை. கட்சி தொடங்கி, முதல்வராக இருக்கட்டும், பிரதமராக இருக்கட்டும். அவரது வயதுக்கு மீறி, அனுபவத்திற்கு மீறி பேசும்போதெல்லாம் அவரை தாக்கி பேசுவது நான் மட்டும்தான். இதற்கு முன்பு பலரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவரது கட்சிக்காரர்கள் நான்கு இடங்களில் நிற்பார் என்று சொன்னது தான் வேடிக்கையாக இருக்கிறது. இலவசத்தை எதிர்ப்பவன் நான் என்று சொன்னவர் இப்போது இலவசம் என்கிறார். கார், பைக் கொடுப்பேன், என்று சொல்கிறார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டிற்கு அழைத்து யாராவது துக்கம் விசாரிப்பார்களா? மக்களை நேரில் சந்தித்து அவர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளாதவர் எப்படி ஒரு தலைவனாக முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார். மேடையில் மட்டும் ஜனநாயகம் பற்றிப் பேசுவது போதாது; அது செயலில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காததுதான் உங்கள் ஜனநாயகமா?
பிரச்சாரத்திற்கு எதற்கு லீவ் விடுகிறார். முதல்முறையாக மக்களை சந்திக்க எல்லா ஊர்களுக்கும் செல்வதனால் டயர்ட் ஆகியிருக்கலாம். மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்பதை சொல்லாமலேயே வாக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார் என விஜயை கடுமையாக விளாசினார்.



