இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல இடங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ₹100-ஐ கடந்துள்ளது. உலகளவில் போர்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இதற்குக் காரணமாக கூறப்படுகின்றன. ஆனால், இதே உலகில் ஒரு நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் ₹2-க்கு கிடைக்கிறது என்றால் நம்ப முடியுதா? அந்த நாடு தான் லிபியா.
ஏப்ரல் 3 நிலவரப்படி, லிபியாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ. 2.14 மட்டுமே. அதாவது, 50 ரூபாய் இருந்தாலே ஒரு கார் டேங்கை முழுமையாக நிரப்பிக் கொள்ளலாம். உலகளவில் மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகளில் லிபியா முதலிடத்தில் உள்ளது. பொதுமக்களுக்கு மலிவான எரிபொருள் கிடைக்க அரசு மிகப்பெரிய அளவில் மானியம் வழங்குகிறது.
லிபியாவில் உற்பத்தியாகும் எண்ணெய், அந்நாட்டின் உள்நாட்டு தேவையை விட அதிகம். அதனால், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும், அதன் தாக்கம் நேரடியாக அங்குள்ள உள்நாட்டு சந்தை விலையில் தெரிவதில்லை. லிபியா 2011 முதல் உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் குழப்பங்களை சந்தித்து வருகிறது. இருந்தாலும், எரிபொருள் மானியக் கொள்கையை அரசு மாற்றவில்லை.
உலக அளவில், ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளிலும் எரிபொருள் மலிவாக கிடைக்கிறது. ஈரானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 2.5 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரை இருக்கும். வெனிசுலாவில் இதைவிடக் குறைவாக இருந்தாலும், உலகில் மிகவும் மலிவான பெட்ரோல் விற்பனை செய்யும் நாடு என்ற இடத்தை லிபியாதான் தக்கவைத்துக் கொண்டுள்ளது.



