பெண் குழந்தைகளை தெய்வமாக கொண்டாடும் சமூகம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் பெண் சிசுக் கொலை போன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெண் குழந்தை பிறந்ததையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும், ஆண் குழந்தை மீதான சமூகப் பாகுபாடும் இன்னும் முற்றிலும் மறையாத நிலையில், பிறந்து சில மணி நேரங்களிலேயே பெண் சிசு கொல்லப்படும் கொடூரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் குழந்தையின் மரணம் மர்மமாக இருந்த நிலையில், விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்திற்காக பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், பிறந்த குழந்தை திடீரென உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குழந்தை இயற்கையாக உயிரிழக்கவில்லை என்றும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குழந்தையின் பாட்டியான தங்கமணி குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மகளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்ததாகவும், இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தியடைந்ததாகவும் கூறியுள்ளார். அதோடு, தனது மருமகனுக்கு மதுப் பழக்கம் இருப்பதால் குடும்பப் பொறுப்புகளை சரிவர கவனிப்பதில்லை என்றும், இரண்டு பெண் குழந்தைகளை தனது மகளால் வளர்க்க முடியாது என்று கருதியதால், பிறந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்கமணியை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆணுறையை வீசி…” பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்த கொடூரம்!



