விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கட்டுனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது. தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளர்கள் சிலர் ஆலைக்கு உள்ளே சிக்கி இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.. ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது..
இந்த நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. பட்டாசு ஆலையின் 4 கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்..
Read More : மிகுந்த வேதனையளிக்கிறது.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. பிரதமர் மோடி இரங்கல்..!



