வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நீளும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதையின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏப்ரல் 21 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். ஏப்ரல் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் மழை பரவல் அதிகரிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் குறுகிய நேரத்திற்குள் அதிக மழையும் பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தாலும், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறையாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 37°C இருக்கும். மழைக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமுள்ளதால், அதிக வியர்வை மற்றும் புழுக்கம் காரணமாக மக்கள் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும்.
Read more: மரணத்திற்கு முன் நாம் காணும் கனவுகள்: மனித மனத்தை ஆராயும் புதிய ஆய்வு.. வியக்க வைக்கும் தகவல்கள்..!



