தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இறுதிக்கட்ட உற்சாகத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களும் வேட்பாளர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவை சந்திக்க தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெண்கள் மற்றும் முதியோருக்கான சிறப்பு வசதிகள் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்களும் இந்த தேர்தலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக உரிமையை பயன்படுத்தும் விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) ஏதாவது காரணத்தால் தொலைந்துவிட்டாலோ அல்லது கையில் இல்லையோ என்றாலும், வாக்களிக்க முடியாத நிலை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் பெயர் நீங்கள் வாக்களிக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனவே முதலில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதை ஆன்லைனில் National Voter Services Portal மூலம் எளிதாக பார்க்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால் voters.ece.gov.in அல்லது Voter Helpline App எனும் தளங்களில் வாக்காளர்கள் தங்கள் புதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. எனவே அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் அல்லது எண் இருந்தால் அதைத் தந்து டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்!
வாக்குச்சாவடிக்கு செல்லும் போது கீழே உள்ள அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்றால் வாக்களிக்கலாம்.
- ஆதார் அட்டை
- புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகம்
- MGNREGA வேலை அடையாள அட்டை
- ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- PAN கார்டு
- தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) அடையாள அட்டை
- பாஸ்போர்ட்
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- அரசு/PSU பணியாளர் அடையாள அட்டை
- எம்.பி/எம்.எல்.ஏ அடையாள அட்டை
- மாற்றுத் திறனாளி அடையாள அட்டை
Read more: முகேஷ் அம்பானி வீட்டில் தினமும் 4000 ரொட்டிகள் தயாரிக்கப்படுகிறதாம்..! ஏன் தெரியுமா?



