உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இன்க்-ல் முக்கிய நிர்வாக மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் பதவியிலிருந்து விலகி, நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார். அவருக்கு பதிலாக, தற்போது வன்பொருள் பொறியியல் மூத்த துணைத் தலைவராக பணியாற்றி வரும் ஜான் டெர்னஸ், வரும் செப்டம்பர் 1 முதல் புதிய CEO-வாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த முடிவு, நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட தலைமைப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டிம் குக், கோடைக்காலம் முழுவதும் CEO-வாகத் தொடர்ந்து பணியாற்றுவார். இந்த காலத்தில், ஜான் டெர்னஸுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, பொறுப்புப் பரிமாற்றம் சீராக நடைபெற உறுதிசெய்வார் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்கும் குக், முக்கிய ஆலோசனைப் பணிகளில் ஈடுபட்டு, நிறுவனத்திற்கு தொடர்ந்து வழிகாட்டுவார்.
பணியாளர்களுக்கு உணர்ச்சி பூர்வமான கடிதம்: நிறுவன பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், டிம் குக் தனது 15 ஆண்டுகால CEO பயணத்தை நினைவுகூர்ந்தார். உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் பயனர்களிடமிருந்து தினமும் கிடைக்கும் கருத்துக்கள் தான் தன்னை ஊக்குவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். “உலகின் மிகச் சிறந்த வேலை என்று நான் கருதும் இந்தப் பொறுப்பை இப்போது புதிய தலைமுறைக்கு ஒப்படைக்கிறேன். இந்தப் பொறுப்புக்கு ஜான் டெர்னஸே சரியான நபர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஜான் டெர்னஸ்? ஜான் டெர்னஸ், கடந்த 25 ஆண்டுகளாக ஆப்பிளில் பணியாற்றி, நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். தொழில்நுட்ப திறன் மற்றும் புதுமை சிந்தனையில் அவர் தனித்துவம் பெற்றவர் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிம் குக் சாதனைகள்: 1998-ல் ஆப்பிளில் இணைந்த டிம் குக், 2011-ல் CEO பதவியை ஏற்றார். அவரது தலைமையில்,
* Apple Watch, AirPods, Vision Pro போன்ற புதிய தயாரிப்பு பிரிவுகள்
* iCloud, Apple Pay, Apple TV, Apple Music போன்ற சேவைகள்
உள்ளிட்ட பல முக்கிய முன்னேற்றங்கள் இடம்பெற்றன. மேலும், நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தியதும், உலகளாவிய வளர்ச்சியை மேம்படுத்தியதும் அவரது முக்கிய சாதனைகளாக கருதப்படுகின்றன.



