தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பூத் கமிட்டி நிர்வாகிகளை ஊக்கமளிக்கும் வகையில் பாஜக சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
பா.ஜ. தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுத் தரும் பட்சத்தில், அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில், பி.எல். சந்தோஷ் நேரில் சென்று சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் மற்றும் பூத் நிலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் அதிகபட்ச வாக்குகளை பெறும் வகையில் திட்டமிடல் மற்றும் வாக்குச்சாவடி மேலாண்மை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த புதிய ஊக்குவிப்பு அறிவிப்பு, தேர்தல் வெற்றியை நோக்கி பாஜக எடுத்துள்ள முக்கியமான உந்துதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அடித்தட்டு பணியாளர்களை நேரடியாக தேசிய தலைவர்களுடன் இணைக்கும் இந்த முயற்சி, அவர்களின் செயல்திறனையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் என கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. மொத்தம் 27 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், இரட்டை இலக்க எம்எல்ஏ வெற்றியை இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு மேலிடம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
Read more: ஒரு முறை சார்ஜ் செய்தால், 142 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்..! கவர்ச்சிகரமான விலையில்..!



