தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன் தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 % வாக்குகள் பதிவாகி உள்ளது.. விஜய் அலையால் தான் இந்தளவு வாக்கு பதிவாகி உள்ளதாக தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.. தவெக தலைவர் விஜய்யும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.. ஆனால் SIR பணிகளுக்கு பின் தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர்.. இதில் 2026 சட்டமன்ற தேர்தலில் 4,83,29,573 வாக்குகள் பதிவானது.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 4.62 கோடி வாக்குகள் பதிவானது.. கடந்த சட்டமன்ற தேர்தலை விட சுமார் 20 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன.. எனவே தமிழ்நாட்டில் வரலாறு காணாத இந்த வாக்குப்பதிவுக்கு SIR பணிகள் காரணம் என்று கூறபப்டுகிறது..
இந்த நிலையில் தவெக தலைமையிலான ஆட்சி அமையும் தவெகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.. இந்த நம்பிக்கை ஒரு அளவுக்கு சரி என்றாலும், அதைக் கடந்து சில ரசிகர்கள் மிகைப்படுத்தலாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விஜய் தலைமையில் அரசு அமைந்தால் யாருக்கு எந்த துறை வழங்கப்படும், யார் யார் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்றெல்லாம் முன்கூட்டியே “உத்தேச அமைச்சரவை பட்டியல்” தயாரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பட்டியலில், விஜய் முதல்வர் என்றும், உள்துறை, மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைகளையும் தக்க வைத்துக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்
விஜய் – முதல்வர்
செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை (நீர்வளம்)
ஆதவ் அர்ஜுனா – செய்தி, விளம்பரம் மற்றும் சுற்றுலாத் துறை
என். ஆனந்த் – போக்குவரத்துத் துறை
வெங்கட் ரமணன் – நிதித்துறை
அருண்ராஜ் – உணவுத்துறை
நிர்மல்குமார் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை
இவ்வாறு மொத்தம் 29 பேருக்கு அமைச்சரவை பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த உத்தேச பட்டியல் நீள்கிறது.
ஆனால், இதில் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கும் துறைகள் பொருத்தமற்றதாக இருப்பதாக பலரும் கேள்வி எழுப்புகின்றனர். “இது என்ன வகை அமைச்சரவை அமைப்பு?” என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, கம்பம் தொகுதியில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றால் அவருக்கு சமூகநீதித் துறை வழங்கப்படும் என கூறப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.. சமூகநீதித் துறை என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான முக்கிய துறையாகும்.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) ஆகியோருக்கான இடஒதுக்கீடு சரியாக நடைமுறையில் உள்ளதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும் இந்த துறைக்கு உள்ளது.
இத்தகைய முக்கியப் பொறுப்புக்கு, ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்புடன் தொடர்புடைய நபரை எப்படி நியமிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவையின் நிறுவனரான இந்த வேட்பாளருக்கு அந்தத் துறை வழங்கப்படுவது எவ்வளவு பொருத்தம் என்ற விவாதமும் நிலவுகிறது.
அதே போல், ஆண்டிபட்டி லெப்ட் பாண்டி என்பவருக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவர்மீது கொலை மிரட்டல், ஆபாச படங்கள் அனுப்பியது உள்ளிட்ட 9 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனை அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.. ஆனால் விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ள இந்த உத்தேச அமைச்சரவை பட்டியல் யதார்த்தத்தத்தில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “விஜய் ரசிகர்கள் தனி பிரபஞ்சத்தில் வாழ்கிறார்கள்..” என்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Read More : நீங்கள் வாக்களித்தால், உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும்! புதிய ஆய்வில் வியக்க வைக்கும் தகவல்..!



