விழுப்புரம் நகராட்சி திடலில் தேசிய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் மிஸ் திருநங்கை நிகழ்வு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த 25 திருநங்கைகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, கானா வினோத், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருநங்கைகளுக்கான சமூக அங்கீகாரம் குறித்து விரிவாக பேசினார். “திருநங்கை என்ற பெயரை சமூகத்தில் நிலைநிறுத்தியவர் கலைஞர் கருணாநிதி. அனைவரும் சமம் என்ற எண்ணத்துடன் அவர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2008ஆம் ஆண்டு திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டதும், கல்வி மற்றும் சமூக வாய்ப்புகள் விரிவடைந்ததும் திராவிட ஆட்சியின் கொள்கை மாற்றத்தின் விளைவாகவே ஏற்பட்டது என அவர் தெரிவித்தார். முன்பெல்லாம் திருநங்கைகள் வழியில் நின்று கையேந்தி கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல.. தற்போது திருநங்கைகள் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களாகவும் உயர்ந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திருநங்கைகளுக்காக தனி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அடையாள அட்டை வழங்குதல், சுய உதவிக்குழுக்கள் மூலம் நிதி உதவி, இலவச தையல் இயந்திரங்கள், வீட்டுமனை பட்டா, வீடுகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மாநில கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மற்றும் மதுரையில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவரை 9,080 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 617 பேருக்கு சுயதொழில் மானியம் வழங்கப்பட்டுள்ளதுடன், 1,599 ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, அனைவரும் சமமான மனிதர்கள் என்ற உணர்வுடன் சமூகமும் அரசும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவர்கள் முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



